மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன். அந்த கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றபிறகு முதன்முறையாக கட்சிக் கொடியை ஏற்றி அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த பெப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். 

அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

கட்சியின் கொடியேற்றி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது...

இன்று நம் அனைவருக்கும் மிக முக்கியமான நாள். மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நமது உயர்நிலைக் குழு கலைக்கப்படுகிறது.

அக்குழுவில் சிறப்பாக தன்னலம் பாராமல் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்காக உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு, உள்ளச்சுத்தியுடன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நமது உயர்நிலைக் குழு உறுப்பினர்களான ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமர வேல், ஏ.ஜி.மவுரியா, எஸ். மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், ஆர்.தங்கவேல் ஆகியோர் இனி மக்கள் சேவையை மகத்தாக செய்து முடிப்பதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இன்று முதல் செயல்படத் தொடங்கி கட்சியினை வழி நடத்துவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களும், மற்ற நிர்வாகிகளும் இவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.