(எம்.எம்.மின்ஹாஜ்)

அரசியல் நோக்கத்துக்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமையினால்  நாட்டின் கல்வி துறை சீர்குலைந்து விட்டது. ஆகவே தரமான கல்விக்கான புதிய சட்டமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

விசேட திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு சுபக புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் குறைப்பாடுகள் இருக்கின்றன. அதனை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆசிரிய பற்றாகுறையும் நிலவுகின்றது. இதன்படி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார். 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்ததில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்குள்ள அதிகாரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. இதன்போது ஆசிரியர் சேவை இணைப்பில் பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டாலும் அதனை யாரும் நடைமுறைப்படுத்துவதில்லை. 

கடந்த காலங்களில் அரசியல் நோக்கங்களுக்காக ஆசிரியர் சேவையில் ஆட்கள் சேர்க்கப்பட்டனர். இது சட்டவிரோதமான செயற்படாகும். இதனையே 30 வருடங்களாக நாம் செய்து வருகின்றோம். அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் மேலும் திறமையான மாணவ சமூகத்தை உருவாக்க முடிந்திருக்கும். ஆனால் எமது தவறினால் தற்போது கல்வி துறை சீர்குலைந்துள்ளது. 

ஆகவே தரமான கல்விக்கான புதிய சட்டமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளோம். இந்த சட்ட தயாரிப்புக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு நான் கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். 

அத்துடன் தமிழ் கல்வி வளர்ச்சி குறத்து நாம் விசேட அவதானம் செலுத்த வேண்டும். இதன்படி தோட்ட புற பாடசாலைகளில் உயர்கல்விக்கான விஞ்ஞான பிரிவினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. மேலும் வடக்கின் கல்வி நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.