(எம்.மனோசித்ரா)

எரிப்பொருள் விலையேற்றத்தில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளது. அதாவது இந்திய எண்ணை நிறுவனத்திற்கு விலையேற்றத்திற்கு அனுமதித்து விட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை விலையை குறைக்கச் செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எரிபொருட்களின் விலை இரண்டு மாதங்களுக்குள் இரு தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். தற்போது பெற்றோல் ஒரு லீற்றர் 145 ரூபாவாகவும் டீசல் ஒரு லீற்றர் 118 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கம் எரிபொருட்களின் விலை திடீரென அதிகரித்தல் மற்றும் குறைவடைவதற்கான காரணத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான விலை அதிகரிப்பின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதே அரசாங்கத்தின் நோக்காகவுள்ளதுடன் மிகப்பெரிய சில்லறை வியாபார நிலையங்களின் இலபத்தை அதிகரிப்பதற்கான ஒரு உத்தியாகவும் இந்த விலை அதிகரிப்பு காணப்படுகின்றது. 

ஆகவே இந்த எரிபொருள் விலையேற்றமானது அரசாங்கத்தினால் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழ்ச்சியாகும். அதாவது  இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தை எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை விலையை குறைக்கச் செய்வதனூடாக மக்களை சுரண்டும் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.