தாய்லாந்து குகையில் சிக்கித்தவித்த மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி காட்சிகள் முதன் முறையாக வெளியாகியுள்ளன.

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23 ஆம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. 

கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் சோர்ந்திருந்த அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் சிகிச்சை பெறும் காணொளி காட்சிகள் முதன் முறையாக வெளியாகியுள்ளது. சிறுவர்கள் கட்டிலில் படுத்திருப்பதை அவர்களின் உறவினர்கள் கண்ணாடி தடுப்புக்கு வெளியே இருந்து பார்த்து கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான  காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.