(எம்.எம்.மின்ஹாஜ்)

இரண்டு தடவைக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் பாரியளவிலான போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை  வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.

போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைத்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டது. 

பாரியளவிலான போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையோருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இரண்டு தடவைக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்கள் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். 

இதற்கிணங்க தற்போது 19 பேர் பாரியளவிலான போதைப் பொருள் கடத்தல் காரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இரு தடவைகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்களின் பட்டியலை நீதி அமைச்சு ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு கையொப்பமிடுவார். அதன்பின்னர் சட்டம் அமுலாகும்.

மேலும் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் உதவியை பெறுவதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.