வட மாகாண சபையில் ப.டெனீஸ்வரன் வகித்த அமைச்சுப் பதவியினை அவருக்கு மீள வழங்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வட மாகாண முதலமைச்சர் தாக்கல் செய்த மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அவரை அமைச்சராக கடமையாற்ற அனுமதிக்குமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இந் நிலையிலேயே இன்றைய தினம் அந்த மனு மீதான விசாரணைகளை நடத்துவதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்படுமானால் நாளைய தினம் குறித்த மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.