(இராேஷா வேலு) 

வெலிகட நாவல வீதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் மிக சூட்சுமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றினை சுற்றிவளைத்து ஏழு பேரை நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய நாவல வீதியில் அமைந்திருக்கும் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றினை சுற்றிவளைத்து ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். 

இச்சம்பவத்தில் பெலிஅத்த, கம்பஹா, மினுவங்கொடை, பொரள்ளை, அம்பலங்கொட மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 31,55,34,39,37,34 மற்றும் 40 வயதுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இலக்கம் 4 அளுத்கடை நீதவானால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமை நேற்று இரவு 9.20 மணியளவில் வெலிகடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த எழுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது இந்நிலையத்தில் இருந்த மேலும் சில பெண்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

மேலும் குறித்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட எழுவரையும்  இன்று இலக்கம் 4 அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகட பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.