பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் மே 31 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து, ஜூலை 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டார். 

இதன்போது கூட்டத்திற்குல் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

இந்த திடீர் தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்ளிட்ட 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.