உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸை எதிர்த்தாடப்போவது குரோஷியாவா? இங்கிலாந்தா? என்பதைத் தீர்மானிக்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

மொஸ்கோ, லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இப் போட்டி இன்று புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குரோஷியாவும் இங்கிலாந்தும் 2 தசாப்தங்கள் அல்லது அதற்கு மேல் பொறுமையுடன் காத்திருந்து இம்முறை உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

உண்மையைக் கூறுவதென்றால் இந்த இரண்டு அணிகளுமே ரஷ்யாவில் அரை இறுதிவரை முன்னேறும் என உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இம் முறை போட்டிக்கு சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடி இவை இரண்டு அணிகளும் அரை இறுதிவரை முன்னேறியுள்ளமை பாராட்டுககுரியதாகும்.

பிரான்ஸ் 1998 உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் தடவையாக விளையாடிய குரோஷியா அவ் வருடம் அரை இறுதிவரை முன்னேறி நான்காம் இடத்தைப் பெற்றது. அதன் பின்னர் இப்போது இரண்டாவது தடவையாக அரை இறுதியில் விளையாடவுள்ளது. குரோஷியா இதுவரை இறுதிப் போட்டியில் விளையாடியதில்லை.

1966இல் தனது சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தில் விளையாடிய முதல் சந்தர்ப்பத்திலேயே உலக சம்பியனான இங்கிலாந்து 24 வருடங்கள் கழித்து இத்தாலியில் அரை இறுதியில் விளையாடியிருந்தது. இப்போது மேலும் 28 வருடங்களின் பின்னர் மீண்டும் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றுள்ளது.

ரஷ்யாவில் முதல் சுற்றில் முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனாவை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த குரோஷியா அப் போட்டியில் நட்சத்திர வீரர் லயனல் மெசிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. அதேபோன்று இன்றைய போட்டியில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹெரி கேனை கட்டுப்படுத்த குரோஷியா வியூகங்களை வகுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் குரோஷியா தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.

முதல் சுற்றில் நைஜீரியா (2 க்கு 0), ஆர்ஜன்டீனா (3 க்கு 0), ஐஸ்லாந்து (2 ககு 1) ஆகிய அணிகளை வெற்றிகொண்ட குரோஷியா நொக் அவுட் போட்டிகள் இரண்டில் டென்மார்க், வரவேற்பு நாடான ரஷ்யா ஆகியவற்றை பெனல்டி முறையில் வெளியேற்றியது.

இங்கிலாந்து முதல் சுற்றில் டியூனிசியா (2 க்கு 1), பனாமா (6 க்கு 1) என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆனால் கடைசி லீக் போட்டியில் பெல்ஜியத்திடம் தோல்வி (0 க்கு 1) அடைந்தது. நொக் அவுட் சுற்றுகளில் கொலம்பியாவை பெனல்டி முறையில் வீழ்த்திய இங்கிலாந்து, சுவீடனுடனான கால் இறுதியில் 2 க்கு 0 என வெற்றிபெற்றது.

இந்த இரண்டு அணிகளிலும் மிகச் சிறந்த வீரர்கள் தாராளமாக இருப்பதால் இன்றைய போட்டி பரபரப்பை ஏற்படுத்தப் போவதுடன் மேலதிக நேரத்துக்கு நீடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

குரோஷியாவும் இங்கிலாந்தும் உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்றையொன்று சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் 7 தடவைகள் இந்த இரண்டு நாடுகளும் விளையாடிய சந்தர்ப்பங்களில் 4 க்கு 2 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றது. ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

குரோஷிய அணியில் லூக்கா மோட்ரிக், ஐவன் பெரிசிக், டெனியல் சுபாசிக் ஆகியோரையும் இங்கிலாந்து அணியில் ஹெரி கேன், ரஹீம் ஸ்டேர்லிங், ஏஷ்லி யங் ஆகியோரையும் நட்சத்திர வீரர்களாக பெயரிடலாம். 

(என்.வீ.ஏ.)

அணிகள் 

குரோஷியா: டெனியல் சுபாசிக், சிமே விர்சால்ஜ்கோ, டிஜான் லவ்ரென், டொமாகொஜ் விடா, ஐவன் ஸ்ட்ரினிக், ஐவன் ராக்கிடிக், மார்செலோ ப்ரோஸோவிக், அன்டே ரெபிக், லூக்கா மொட்ரிக் (அணி்த் தலைவர்), ஐவன் பெரிசிக், மரியோ மண்ட்ஸூக்கிக்.  

இங்கிலாந்து: ஜோர்டான் பிக்போர்ட், கய்ல் வோக்கர், ஜோன் ஸ்டோன்ஸ், ஹெரி மெகயர், கீரன் ட்ரிப்பர், டேல் அலி, ஜோர்டான் ஹெண்டர்சன், ஜெசே லங்கார்ட், ஏஷ்லி யங், ரஹீம் ஸ்டேர்லிங், ஹெரி கேன் (அணித் தலைவர்).