(இராஜதுரை ஹஷான்)

"நாட்டில்  சட்டம் ஒழுங்கு படுமோசமாக சீர் குலைந்திருப்பதாகவும் தனிநபர்கள் சட்டத்தை கையில்  எடுத்துக் கொண்டு அடாவடித்தனமாக செயற்படுவதாகவும்  இன்று குற்றஞ்சாட்டுகின்ற முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோதாபாய ராஜபக்ஷ கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தலைவிரித்தாடிய  குற்றச்செயல்களையும்  சட்டவொழுங்கு சீர்குலைவுகளையும்  மறந்து விடக் கூடாது."  என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார  குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று இடம் பெற்ற  செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய  நளின் பண்டார,

"கடந்த ஆட்சி காலத்தில்  இடம் பெற்ற வெள்ளைவேன் கடத்தல் பயங்கரம்,  ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டமை, நீதி கோரி மக்கள் போராட்டங்களை நடத்திய போது  அப்பாவி மக்களை தாக்கியமை போன்ற விடயங்களை  மக்கள் மறந்துவிடக் கூடாது.

தேசிய அரசாங்கத்தில் சட்டம், ஒழுங்கு முறையாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது . கடந்த கால அரசாங்கத்தில் வன்முறையில் அடக்கப்பட்ட விடயங்கள் இன்று  சட்டரீதியில் அனுகப்பட்டு வருகின்றது. மேலும் பாதாள குழுவினருக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும்  நடவடிக்கைகள் மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என்று எதிர்தரப்பினர் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் நாட்டில் சர்வாதிகார போக்குகளே காணப்பட்டது பெயரளவிலே நீதித்துறை சுயாதீனமாக செயற்பட்டது. ஊடகங்களும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை காணப்பட்டது. சர்வாதிகார கொள்கையினை முன்னிலைப்படுத்தி ஜனநாயக முறையில் ஆட்சியினை மேற்கொள்வதாக செயற்பட்டனர். 2015ம் ஆண்டுக்கு பிறகு  நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டது.

இன்று நீதித்துறை எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லாமல் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றது. மறுபுறம் பாதாள குழுவினருக்கு எதிராக அரசாங்கம்   தீவிரமாக செயற்பட்டு வருகின்றது . ஆனால் முன்னர் பாதாள குழுவினருக்கு  ஆதரவாக அரசாங்க தரப்பினரே காணப்பட்டனர்.

கடந்த அரசாங்கத்தினையும் தேசிய அரசாங்கத்தினையும் ஒரு போதும்  ஒப்பிட முடியாது.  அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை எதிர்தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியலில் பிரவேசிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வெள்ளை வேன் விவகாரம், முக்கிய ஊடகவியலாளர்கள்  படுகொலை  மற்றும் காணாமலாக்கப்பட்டமை,  தமக்கு    எதிரான குற்றங்களின் ஆதாரங்கள் குறித்த ஊடகத்தில் காணப்படுகின்றது என்று அறிந்து  அவ்வூடகத்தினை  தாக்கி தீவைத்தமை, முன்னாள் பிரதம நீதியரசர் சிறியானி பண்டாரவிற்கு எதிராக  செயற்பட்டமை போன்ற எண்ணிலடங்காத விடயங்கள் கடந்த 10 வருட ஹிட்லர் ஆட்சியில் இடம் பெற்றது . 

இவ்வாறான எந்த சட்டவிரோத செயற்பாடுகளும் தேசிய அரசாங்கத்தின் 3 வருட நிர்வாகத்தில் இடம் பெறவில்லை என்ற விடயத்தினை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேசிய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் நாடு பாரிய எதிர் விளைவுகளை எதிர்கொண்டுள்ளது ஆகவே ஹிட்லர் ஆட்சியே சிறந்தது என்று எதிர் தரப்பினர்  குறிப்பிடுவது ஜனநாயக கொள்கைகளுக்கு முரணானதாகவே காணப்படுகின்றது . விஜயகலா விவகாரத்தினை பெருமளவில் எதிர்த்தவர்கள்  இவ்விடயத்தில் அமைதி காப்பதன் நோக்கம் பற்றி மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகவே காணப்படுகின்றது.

பாதாள  குழுவினருக்கு எதிராக  தற்போது பாரிய வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  குறுகிய காலக்கட்டத்தில் பாதாள குழுவினருடன் தொடர்புப்பட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விடயத்தினை காரணம்  காட்டியே எதிர் தரப்பினர் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் எமது காலத்தில் இவ்வாறு பாதாள குழுவினர் வெளிப்படையாக செயற்படவில்லை என்று குறிப்பிடுகின்றனர். அதுவும் உண்மைதான்  கடந்த காலத்தில் அரசாங்கத்தின் பாதாள  குழுவினர் முக்கிய  அங்கம் வகித்தமையின் காரணமாகவே அவர்கள் வெளிப்படையாக செயற்படவில்லை என்ற விடயத்தினை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். 

கூட்டு  எதிரணியில் பெரும்பாண்மை உறுப்பினர்கள்  ஹிட்லர் உருவாகுவதை விரும்பவில்லை இவர்கள் ஆரம்பத்தில் இருந்து ஹிட்லரது கொள்கைகளை கவனித்து வந்தமையினாலும்  அதனால்  ஏற்பட்ட விளைவுகளை எதிர்கொண்டமையின் காரணமாகவும்  தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே மக்கள் தற்போது தேசிய அரசாங்கத்தில் மாற்றமடைய கூடிய விடயங்களை கருத்திற்கொண்டு அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாமல் நிலையான  அமைதியினையும், சுதந்திரத்தினையும் தோற்றுவிக்கும் அரசாங்கத்தினை தோற்றுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்." என தெரிவித்தார்.