(நா.தனுஜா)

மாகாண சபை தேர்தல்களை விரைந்து நடத்தாவிட்டால் நாட்டில் சட்டம், நீதி மற்றும் ஒழுங்கு என்பன முழுமையாக செயலிழக்கும் நிலைமை உருவாகும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்பிருந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் சிறந்த முன்னேற்றங்கள் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினர். ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் நிலை மிக மோசமாகியுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய காலப்பகுதி கடந்த செப்டெம்பர் மாதத்துடன் காலாவதியடைந்துள்ளது. எனினும் தற்போதுவரை தேர்தலை நடத்துவதற்குரிய எவ்வித நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படவில்லை. 

தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் மக்களை திசை திருப்பும் நோக்கிலேயே விஜயகலா மகேஸ்வரனின் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவை வினைதிறனாக செயற்படும்போதே முழு நாடும் சீராக இயங்க முடியும். இங்கு மாகாண சபைகள் முறையாக நிர்ணயிக்கப்படாமல் இருப்பதனாலேயே நாட்டின் அரச சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 

ஆகவே அரசாங்கம்  நாட்டிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வுகான மாகாணசபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் நாட்டின் நீதி, சட்டம் மற்றும் ஒழுங்கு என்பன முழுமையாக செயலிழக்கும் நிலைமை உருவாகும் என்றார்.