உலகக் கிண்ண வரலாற்றில் பிரான்ஸிடம் அடைந்த தோல்விகளை பெல்ஜியம் இன்று நிவர்த்திக்குமா?

Published By: Digital Desk 4

10 Jul, 2018 | 10:03 AM
image

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெல்லப் போகும் அணிகள் இவ் வார இறுதியில் தீர்மானிக்கப்படவுள்ளன.

இதற்கு முன்னோடியாக உலகக் கிண்ணத்துடன் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடப்போவது எந்த அணி என்பதையும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடப்போவது எந்த அணி என்பதையும் தீர்மானிக்கும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸும் பெல்ஜியமும் விளையாடவுள்ளன.

ஐரோப்பிய கால்பந்தாட்டத்தில் பலசாலிகளாக விளங்கும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டி செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக மிகுந்த நம்பிக்கையுடன் ரஷ்யா சென்றுள்ள இந்த இரண்டு அணிகளும் இதுவரை அந்த நம்பிக்கையை ஈடேற்றிக்கொண்டுள்ளன. 

முதல் சுற்றிலிருந்து கால் இறுதிவரை கடும் சவால்களையோ அழுத்தங்களையோ எதிர்கொள்ளாத இந்த இரண்டு அணிகளும் இன்று முதல் தடவையாக சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொள்ளவுள்ளன.

முன்னாள் உலக சம்பியன்களான ஆர்ஜன்டீனாவையும் (இரண்டாம் சுற்று), உருகுவேயையும் (கால் இறுதி) பிரான்ஸ் வெற்றிகொண்ட அதேவேளை முன்னாள் உலக சம்பியன்களான இங்கிலாந்தையும் (முதல் சுற்று), பிரேஸிலையும் (கால் இறுதி) பெல்ஜியம் வெற்றிகொண்டிருந்தது. 

எவ்வாறாயினும் ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸும் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பெல்ஜியமும் பின்களத்தில் இழைத்த தவறுகள், அடைந்த தடுமாற்றங்கள் என்பன அந்த அணிகள் குறித்த சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. எனினும் அவற்றையெல்லாம் திருத்திக்கொண்டு இரண்டு அணிகளும் புதிய வியூகங்களுடன் இன்றைய போட்டியில் கால்பந்தாட்ட இரசிகர்களை பரபரப்பில் ஆழ்தும் என எதிர்பார்க்கலாம்.

இரண்டு அணிகளதும் போட்டி முடிவுகளை நோக்கும்போது பிரான்ஸுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான இன்றைய போட்டி மேலதிக நேரம் வரை தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிரான்ஸின் முன்னைய போட்டியில் சுய விருப்பில் விளையாடாமல் இருந்த ப்ளெய்ஸ் மெட்டுய்டி இன்றைய போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தின் முக்கிய வீரர்களில் ஒருவரான தொமஸ் மியூனியிர் இரண்டு மஞ்சள் அட்டைகள் காரணமாக இன்றைய போட்டியை பார்வையாளராக கண்டுகளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக நாசர் செட்லி வலதுபுற வீரராக விளையாடவுள்ளதுடன் யெனிக் கரஸ்கோ இடதுபுறத்தில் இடம்பெறவுள்ளார்.

செல்சி கழகத்துக்காக ஒன்றாக விளையாடிவரும் அதி சிறந்த வீரர்களான ஈடன் ஹஸார்ட் (பெல்ஜியம்), எங்கோலோ கன்டே (பிரான்ஸ்) ஆகிய இருவரும் இன்று எதிரும் புதிருமாக விளையாடவுள்ளதுடன் ஹஸார்டைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை கன்டேக்கு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸும் பெல்ஜியமும் அடிக்கடி ஒன்றையொன்று எதிர்த்தாடி வந்துள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதிய 74 சந்தர்ப்பங்களில் 31 தடவைகள் பெல்ஜியமும் 24 தடவைகள் பிரான்ஸும் வெற்றிபெற்றுள்ளன. 19 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் இரண்டு தடவைகளே இவ்விரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. மெக்சிகோவில் 1986இல் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்த இரண்டு நாடுகளும் கடைசியாக சந்தித்தபோது மேலதிக நேரத்தின்போது பிரான்ஸ் 4 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றிருந்தது. மற்றைய போட்டியிலும் (1938 முதல் சுற்று) பிரான்ஸ் 3 க்கு 1 என வெற்றிபெற்றிருந்தது. இன்றைய தினம் அந்த முடிவுகளை பெல்ஜியம் தலைகீழாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பெல்ஜியம் கடந்த 32 வருடங்களில் இரண்டாவது தடவையாகவும் பிரான்ஸ் கடந்த 88 வருடங்களில் ஆறாவது தடவையாகவும் (1958, 1982, 1986, 1998, 2006, 2018) அரை இறுதியில் விளையாடுகின்றன.

பிரான்ஸ் அணியில் அன்டொய்ன் க்றீஸ்மான், 19 வயதுடைய கிலியான் எம்பாப்பே, போல் பொக்பா ஆகியோரும் பெல்ஜியம் அணியில் ஈடன் ஹஸார்ட், ரெமேலு லூக்காக்கு, கெவின் டி ப்றயன் ஆகியோரும் நட்சத்திர வீரர்களாக கருதப்படுகின்றனர். 

(என்.வீ.ஏ.)

அணிகள் 

பிரான்ஸ்: ஹியூகோ லோரிஸ் (அணித் தலைவர்), லூக்கஸ் ஹேர்னண்டெஸ், செமுவல் யூம்டிட்டி, ரபாயல் வோரேன், பெஞ்சமின் பவார்ட், எங்கோலோ கன்டே, போல் பொக்பா, ப்ளெய்ஸ் மெட்டுய்டி, அன்டொய்ன் க்றீஸ்மான், கிலியான் எம்பாப்பே, ஒலிவியர் கிரூட். 

பெல்ஜியம்: திபோட் கோர்ட்டொய்ஸ், ஜேன் வேர்ட்டொஞ்சென், வின்சென்ட் கொம்ப்பனி, தோமஸ் வெர்மேலன், டொபி ஆல்டர்வெய்ரெல்ட், யெனிக் கெரஸ்கோ, எக்செல் விட்செல், கெவின் டி ப்றயன், நாசர் செட்லி, ஈடன் ஹசார்ட் (அணித் தலைவர்), ரொமேலு லூக்காக்கு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41