இலங்கை கடல் எல்லைக்குள் இந்தி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராயத்துக்கு முன்பாக எதிர்வரும் 29 ஆம் திகதி ஆர்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணையத் தலைவர் என்.எம். ஆலம் தெரிவித்தார்.

வடமாகாண கடற் தொழிலாளர்களின் இணையத் தலைவர் என்.எம். ஆலம் இவ் விடயம் குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு அண்மையில் வருகை தந்த இந்திய வெ ளியுறவுத்துறை அமைச்சர் மீனவர் பிரச்சினை தொடர்பாக டில்லிக்கு வருகை தருமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவ் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை கடற்தொழில் அமைச்சர் டில்லி செல்ல உள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது.

இந் நிலையில் கடற்தொழில் அமைச்சரின் விஜயத்திற்கு முன்னர் இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் 27 பேரும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் எமது கடற்தொழில் அமைச்சரின் இந்திய விஜயத்தின் நோக்கம் இன்னும் தெ ளிவுபடுத்தப்படவில்லை. அத்துமீறி வரும் தமிழக மீனவர்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்ன? வடபகுதி மீனவர்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சர் கூறப்போகும் செய்தி என்ன? மீளவும் மீனவர் பேச்சுவார்த்தை என்ற பதத்தை பாவித்து இழுத்தடிக்கப் போகின்றனரா? அல்லது இந்திய மீனவர் தலைவர்கள் கோருவது போல் 80 நாட்கள் எமது கடற்பரப்பில் தொழில் புரிய இடம் வழங்கப் போகின்றனரா? அல்லது எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு கோரப் போகின்றனரா? என்பது மூடு மந்திராமாக உள்ளது.

இருந்தும் முன்பிருந்த அமைச்சர்களைவிட தற்போதைய கடற்தொழில் அமைச்சர் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இழுவை மடிகளை பயன்படுத்துவதை தொடர்ந்தும் கடுமையாக எதிர்த்து வருவதை நாம் கண்டு வருகின்றோம்.

எனினும் தமிழக மீனவர்கள் தங்கள் நியாயமற்ற கோரிக்கையை வலியுறுத்தி 29 ஆம் திகதி சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதுவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளனர். இச் செயற்பாடுகளினால் எமது அமைச்சர் தன் நிலையிலிருந்து தழர்ந்து விடாதிருக்கவும் தமிழக மீனவர்களுக்கு வடபகுதி மீனவநிலையை அழுத்தமாக தெரிவிக்கும் முகமாக அமைச்சரின் இந்திய விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களாகிய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகம் முன்பாக தமிழக மீனவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணையம் தீர்மானித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தலைமன்னார் நிருபர்)