(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தினை அவமதிக்கும் வகையில் பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு வீசுவதாக கருத்து வெளியிட்டவர்கள் இன்று பாராளுமன்றத்தினதும் நாட்டின் பாரம்பரிய கோட்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிடுவது வேடிக்கையாகவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் தேசிய பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றத்தின் கோட்பாடுகளை மீறினார் என்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றனர்.

அத்துடன் கடந்த காலங்களில் நாட்டின் முக்கிய தளமான  பாராளுமன்றத்தின் செங்கோலை பற்றி உடைக்க முற்பட்டவர்களும் சபாநாயகரை அவமதித்து  பேசியவர்களும் மக்கள் பிரதிநிதிகள் திரண்டு நிற்கின்ற பாராளுமன்றத்தை பகிரங்கமாக  குண்டு வீசி தகர்ப்பேன் என்று குறிப்பிட்டவர்களும் இவர்கள் தான். 

ஆனால் தற்போது இவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து பிறிதொருவரின் விடயத்தை பகடைக்காயாக்கி தேசிய பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றத்தின் கோட்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து அரசியல் இலாபம் ஈட்ட முயல்கின்றனர் என்றார்.