விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலை புலிகளின் பிரதிநிதிகளாக அவர்களின் இலட்சியத்தை முன்னெடுப்போம் என தெரிவித்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற கொலைகள், உயிரிழப்பு சொத்தழிப்பு அனைத்திற்கும் காரணமாக சம்பந்தனும், சேனாதிராஜாவுமே இருந்துள்ளனர். ஆகவே அவ்வாறானவர்களை விட்டுவிட்டு ஏன் விஜயகலா மீது நடவடிக்கை எடுக்க தென்னிலங்கை மக்கள் கொந்தளிக்கின்றனர். 

இந் நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தன்னை அடக்கி கொள்ள முடியாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இது ஓர் தவறு கிடையாது. காரணம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் குற்ற செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. குற்றம் செய்வோர் அச்சத்துடன் இருந்தார். அதனால் குற்றம் இடம்பெறவில்லை. இந்த நிலையில் விஜயகலா உணர்ச்சிவசப்பட்டு, தான் வகிக்கும் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து எதையும் செய்ய முடியவில்லையே என எண்ணியே தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.

ஆகவே விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வேன் என்றார்.