மன்னார் நகர நுழைவாயிலில்  உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித  எலும்புக்கூட்டு  அகழ்வு பணிகள் இன்று 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரு அளவிற்கு முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

 இன்று மேற்படி வளாகத்தின் முகப்பு பகுதியை மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்தி மனித எச்சங்கள் காணப்படுகின்றனவா? என ஆராய்ந்து பார்த்த சமயத்தில் மேலும் அதிகளவிலான சிதறிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

 முகப்பு பகுதிகளில் தற்போது இன்னும் அதிகளவிலான மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தோகம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து முகப்பு பகுதியை மேலும் ஆழப்படுத்தி ஆகழ்வு செய்வதற்கான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.

 குறித்த அகழ்வு பணிகளில் தற்போது மனித வள பற்றாக்குறை காணப்படுவதனால் மீட்பு மற்றும் அப்புறப்படுத்தல் பணி மிகவும் மந்த கதியில் இடம் பெற்று வருகின்றதை அவதானிக்க கூடியாதாக உள்ளது.குறித்த அகழ்வு பணிகளின் போது சுமார் 30 இற்கும் மேற்பட்ட முழுமையான,மற்றும் பகுதி அளவிலான மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டு வருகின்ற மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலே சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.