இங்கிலாந்துக்கு  அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் மூலம் வெற்றியீட்டியதனால் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2:1 எனற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

அந்த வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதலில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரில் முதல் பேட்டியை இந்திய அணியும் இரண்டாது போட்டியை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியிருந்தது. 

இந் நிலையில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று பிரிஸ்டோவில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இங்கிலாந்து அணியை பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் புகுந்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜேசன் ரோய், பட்லர் இருவரும் இந்திய அணியின் பந்துகளை துவம்சம் செய்தனர். பாண்டியா வீசிய நான்கு ஓவர்களில் முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 22 ரன்கள் சேர்த்தார். மேலும் அதிரடியாக ஆட்டம் காட்டிய ரோய் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

இந் நிலையில் 8 ஓவரில் கவுல் வீசிய பந்தில் சிக்கி பட்லர் 34 ஓட்டங்களுடன்  ஆட்டமிழந்தார். அத்துடன் 10 ஓவரில் சாஹர் வீசிய பந்தில் 6 சிக்ஸர்களையும் 4 பவுண்ரிகளையும் விளாசிய ரோய் 67 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதனையடுத்து களம்புகுந்த வந்த ஹேல்ஸ்(30), மோர்கன்(6), ஸ்டோக்ஸ்(14), பேர்ஸ்டோ(25), வில்லி(1) ஜோர்தான்(3) மற்றும் பிளங்கெட்(9) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். இதில் பாண்டியா வீசிய 18 ஓவரில் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவும், கவுல் வீசிய இறுதி ஓவரில் பிளங்கெட், ஜோர்டானும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பாக பாண்டியா 4 விக்கெட்டுகளையும், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாஹர் மற்றும் உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

199 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் அணி களம் புகுந்த இந்திய அணியின் ரோகித் சர்மா, தவன் ஆட்டத்தை தொடங்கினார்கள். ரோகித் சர்மா வில்லி வீசியே முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் அடித்து பட்டயை கிளப்பினார்.  இந் நிலையில் வில்லி வீசிய 3 ஆவது ஓவரில் தவான் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ராகுல், ரோகித் சர்மாவுடன் கைசோர்த்து ஆட ஆரம்பித்தார். ஜோர்டான் வீசிய 4 ஆவது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 16 ஓட்டங்களை எடுத்தார் ரோகித். ராகுலும் இவருக்கு இணையாக  சிக்ஸர்கள்,பவுண்டரிகள் என விளாசி தனது பங்களிப்பினையும் வழங்கினார். 

இருப்பினும் நீண்டநேரம் தாக்குப் பிடிக்காத ராகுல் பால் வீசிய பந்தில் 19 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்து சென்றார். அடுத்து ரோஹித்துடன் அணியின் தலைவர் விராட் கைகோர்த்த வேளை போட்டியில் அதிரடி காட்டிய ரோகித் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

29 பந்துகளில் 43 ஓட்டங்களை  சேர்த்த விராட் கோலி, ஜோர்தனின் பந்து வீச்சில் பிடிகொடுத்து வெளியேறினார் இவரைத் தொடர்ந்து களம் புகுந்த பாண்டியா பட்டையைக் கிளப்பினார். 

இறுதியாக 4 ஓவர்களுக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் இந்த 44 ரன்களை  ரோகித்தும் பாண்டியாவும் இணைந்து  3 ஓவர்களிலேயே அடித்துவிட்டனர். 

இறுதியாக இந்திய அணி 18.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

போட்டியில் ரோகித் சர்மா 56 பந்துகளில் 5 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்களாக 100 ஓட்டங்களையும் பாண்டியா 14 பந்துகளில் 2 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்களாக 33 ஒட்டங்களையும் அட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இப் போட்டின் மூலம் இருபதுக்கு 20 வரலாற்றிலேயே ஒரே இன்னிங்ஸில் 5 பிடியெடுப்புக்கள‍ை எடுத்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை  “தல” தோனி படைத்துள்ளார்.

அத்துடன் வெற்றிக்கு பிரதான கருத்தாவாகவிருந்த ரோகித்,  அடித்த விளாசிய சதம், இருபதுக்கு 20 போட்டியில் அவர் அடித்த மூன்றாவது சதமாகும் என்பதுடன் இருபதுக்கு 20 போட்டியில் மூன்று சதங்கள் அடித்த சர்வதேச அளவில் இரண்டாவது வீரருமாவார்.

மேலும் ரோகித் சர்மா 14 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, இருபதுக்கு 20  போட்டியில் இரண்டாயிரம் ஓட்டங்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்க முன் கோலி இரண்டாயிரம் ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அத்துடன் இந்திய அணி இலங்கிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டித் தொடரை கைப்பற்றியதன் மூலாக தொடர்ச்சியாக 6 இருபதுக்கு 20 போட்டித் தொடரை வெற்றியீட்டிய சாதனை புரிந்துள்ளது.

இதற்கு முன்னதாக, அயர்லாந்துடன் 2-0 என்ற கணக்கிலும், இலங்கை - வங்காள தேசத்துடன் முத்தரப்பு தொடரிலும், தென் ஆப்ரிக்காவுடன் 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடன் 3-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்துடன் 2-1 என்ற கணக்கிலும் இருபதுக்கு 20 தொடரை வெற்றியீட்டியமை  குறிப்பிடத்தக்கது.