துருக்கியில் கடந்த 2016 ஆம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 18500 அரசு பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.

துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. 

அந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தூண்டியவர் என துருக்கி கூறும் மதகுரு பெதுல்லா குலெனின் ஆதரவாளர்கள் என குற்றம்சாட்டி, ஏற்கெனவே ராணுவம், காவல்துறை, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றிய.சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களை துருக்கி அரசு பணி நீக்கம் செய்தது.

இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என துருக்கி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அவரை நிபந்தனையின்றி ஒப்படைக்குமாறும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2016-ம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 8 ஆயிரத்து 998 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 6 ஆயிரத்து 152  ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 18 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த துருக்கி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி எர்டோகன், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி, முன்பு இருந்ததை விட இம்முறை அதிகப்படியான அதிகாரங்களை உடைய ஜனாதிபதியாக அவர் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.