இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிடிக்கப்பட்ட கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற கணவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது தனோகி பகால் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தாரு காமேதி. இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

ஆனால், அந்த பெண் வேறு ஒரு வாலிபருடன் தவறான உறவை ஏற்படுத்தி கொண்டார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. பழங்குடி தலைவர்கள் அவர்களை பிரித்து வைத்தனர்.

இதனால் அந்த பெண் தனியாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே காதலித்த வாலிபரை சந்திப்பதற்காக சரே கார்டு என்ற இடத்துக்கு சென்றார். அவர்கள் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

இந்த வி‌டயம் அவருடைய கணவர் தாரு காமேதிக்கு தெரிய வர. மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் அவமானப்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.

ஊர்க்காரர்களை அழைத்து கொண்டு அந்த இடத்துக்கு சென்று. அங்கிருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை அவர்கள் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்தனர்.

பின்னர் இருவரின் கைகளை கட்டி அவர்கள் ஆடையை களைந்து நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்து வந்தனர். இதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. இந்த காட்சியை பலர் தொலைபேசிகளில் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். அவருடைய கணவர் தாரு காமேதி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே பகுதியில் 2016-ம் ஆண்டு காதல் ஜோடி ஒன்றை இதே போல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.