சுவீடனுக்கு எதிராக ரஷ்யாவின் சமாரா எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்து, 28 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஹெரி மெகயர், டேல் அலி ஆகிய இருவரும் தலையால் தட்டி போட்ட கோல்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தன.

1966இல் தனது சொந்த மண்ணில் உலக சம்பியனான இங்கிலாந்து 1990இல் ஜேர்மனியிடம் அரை இறுதியில் பெனல்டி முறையில் தோல்வியைத் தழுவியது. இப்போது மூன்றாவது தடவையாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

ரஷ்யா 2018 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிகப்படியாக 6 கோல்கள் போட்டு தங்கப் பாதணிக்கு குறிவைத்து விளையாடி வரும் ஹெரி கேனைக் கட்டுப்படுத்துவதில் சுவிடன் அதிக கவனம் செலுத்தியது. இதன் காரணமாக இங்கிலாந்தின் மற்றைய வீரர்கள் கோல் போடுவதற்கான முயற்சியில் இறங்கினர்.

இரண்டு அணிகளும் போட்டியின் ஆரம்பத்தில் மிக நிதானமாகவும் மெதுவாகவும் விளையாடின. போட்டியின் 19ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன கோலை நோக்கி உதைத்த பந்து இலக்கு தவறி வெளியே சென்றது.

30ஆவது நிமிடத்தில் போட்டியில் பதிவான முதலாவது பெனல்டி இங்கிலாந்துக்கு கனி கொடுப்பதாக அமைந்தது. ஏஷ்லி யங்கின் கோர்ணர் கிக்கை நோக்கி உயரே தாவிய மெகயர் தலையால் தட்டி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு இங்கிலாந்தை முன்னிலையில் இட்டார்.

இதனை அடுத்து எதிர்த்தாடுவதில் சுவீடன் ஈடுபட்ட போதிலும் தவறுகள் காரணமாக பந்தை எதிரணியிடம் தாரைவார்த்த வண்ணம் இருந்தது.

44ஆவது நிமிடத்தில் ஓவ் சைட் வலையில் சிக்கிய ரஹீம் ஸ்டேர்லிங்குக்கு அடுத்த நிமிடம் கோல்போடுவதற்கு கிடைத்த வாய்ப்பை சுவீடன் கோல்காப்பாளர் ரொபின் ஒல்சன் திசைதிருப்பினார்.

இடைவேளையின் பின்னர் 47ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்துவதற்கு சுவீடனுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் மார்க்கஸ் பேர்க் தலையால் தட்டிய பந்தை நோக்கி இடது புறமாக தாவிய இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டான் பின்போர்ட் அற்புதமாக தடுத்தார்.

12 நிமிடங்கள் கழித்து ஜெசே லிங்கார்ட் உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய அலி மிகவும் அலாதியாக தலையால் தட்டி இங்கிலாந்தின் இரண்டாவது கோலைப் போட்டார்.

அடுத்த மூன்றாவது நிமிடத்தல் இங்கிலாந்து கோல்காப்பாளர் பிக்போர்ட் இரண்டாவது தடவையாகவும் அற்புதமாக செயல்பட்டு சுவீடன் வீரர் விக்டர் க்ளாசனின் முயற்சியைத் தடுத்தார். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் கோலை நோக்கி வந்த பந்தை பிக்போர்ட் தனது கையால் தட்டி குறுக்குக் கம்பத்துக்கு மேலாக செல்ல வைத்தார்.

இங்கிலாந்துக்கு 78ஆவது நிமிடத்தில் கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்பு வீண் போனது.

அதன் பின்னர் உபாதையீடு நேரம் உட்பட 12 நிமிடங்களுக்கு இரண்டு அணிகளும் வேகத்துடனும் விறுவிறுப்புடனும் எதிரத்தாடலில் ஈடுபட்ட அதேவேளை அவற்றின் தடுத்தாடலும் சமமாக அமைந்ததால் மேலதிக கோல் எதுவும் போடப்படாமல் போட்டி முடிவுக்கு வந்தது.

(என்.வீ.ஏ.)