நடிகை அஞ்சலி நடிக்கும் ‘ஓ’ என்ற புதிய ஹொரர் படத்தின் பூஜை இன்ற சென்னையில் நடைபெற்றது.

விஜய் அண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தில் நாட்டு வைத்தியராக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது ‘லிஸா ’ என்ற முப்பரிமாண பேய் படத்தில் நடித்து வருகிறார். 

அத்துடன் ஓ என்ற பேய் படத்திலும் நடிக்கிறார். இதில் லிஸா தமிழ் மற்றும் மலையாள மொழியிலும், ஓ தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் உருவாகிறது. இதனை அறிமுக இயக்குநர் பிரவீண் பிக்காட் என்பவர் இயக்குகிறார். 

இந்த படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது,‘இது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படவிருக்கும் படம். இந்த படத்தில் ஹொரர் மட்டுமே புதிய கோணத்தில் இடம் பெற்றிருக்கும். புனிதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி, ஒரு முறை ஒரு வீட்டில் தங்க நேரிடுகிறது. அங்கிருக்கும் எதிர்மறை சக்தி இவரை ஆட்கொள்ள, அதிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்பது தான் கதை. 

ஓ என்பதற்கு பல்வேறு அர்த்தம் இருக்கிறது. கணிதத்தில் இது விசேடமான எண். ஒலியாக கேட்கும் போது ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற வகையில் மனிதர்களின் உணர்வை வெளிப்படுத்தும். அமானுஷ்ய சக்தியில் ஓ என்பது ஆரா என்ற சக்தி வட்டத்தைக்குறிக்கும். இப்படி பல அர்த்தங்கள் இருக்கிறது. இதற்கும் கதைக்கும் தொடர்பு இருப்பதால் ஓ என்று பெயரிட்டோம்.’ என்றார்.