ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் தமிழகத்தை பாரதீய ஜனதா ஆட்சி செய்து வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி குற்றம் சாட்டியிருக்கிறார். 

இது தொடர்பாக அவர்  மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ 1943ஆம் ஆண்டு திராவிட கழகம் சார்பில் தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் மாணவர் கழகம் இன்று 75 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய பவள விழாவை கொண்டாடுகிறது.

மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு தன்னுடைய பணிகளை செய்து வருகிறது. நீட் தேர்வு என்பது எவ்வளவு குளறுபடியாக இருக்கிறது.

அதேபோல் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு அம்ச திட்டம் என்று கூறி வேதங்கள் மற்றும் பழைய புராணங்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

நீட் தேர்வை மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள நடைமுறையில் மத்திய அரசு மாநில அரசுகளை மரியாதைக்கு கூட கவனிப்பதில்லை.

நீட் தேர்வு தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. அனைத்து மாநிலத்திலும் உள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளது.

எனவே நீட் தேர்வு மற்றும் கல்வித்துறையில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் மிகப்பெரிய பிரசாரத்தை நடத்த உள்ளது.

அரசியல் சட்டத்தையே தற்போது அரசு மதிப்பதாக தெரியவில்லை. ஆளுநருடைய ஆட்சி இருந்தால் மட்டுமே ஆளுநருக்கு வேலை. அல்லது நெருக்கடி நிலை ஏற்படும்போது டில்லிக்கு தகவல் கொடுப்பது மட்டும் தான் அவருடைய வேலை. ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று போட்டி அரசாங்கம் நடத்துவது அவருடைய வேலை அல்ல. ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் தமிழகத்தில் பா.ஜ.க தற்போது ஆட்சி செய்து வருகிறது.’ என்றார்.