(எம்.மனோசித்ரா)

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் கொண்ட ஒழுக்காற்று விசாரணை குழுவை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

விஜயகலா மகேஷ்வரன் யாழ்பாணத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் விடுதலைப் புலிகள் பற்றிய கருத்தினை முன்வைத்திருந்தார். 

அது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியாகின. அது மாத்திரமன்றி அரசியலமைப்பிற்கு முரணான வகையில் விஜயகலா மகேஷ்வரன் கருத்து தெரிவித்துள்ளதாக பாராளுமன்றத்திலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இதனடிப்படையில்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விஜயகலா மகேஷ்வரனை அலரிமாளிகைக்கு அழைத்து விளக்கம் கோரியிருந்தார். இதன் பின்னர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டது. 

எனினும் தற்போது அவர் பதவி விலகியிருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும். எனவே இவ் விசாரணையை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசிய  கட்சியின் பொது செயளாலர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் புதன்கிழமை விஜயகலா மகேஷ்வரனிடம் ஒழுக்காற்று குழு  விசாரணைகளை  மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.