ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி உலக ஜுனோஸிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் மனிதர்களுக்கு விலங்குகளின் வழியாக ஏற்படும் தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. 

அத்துடன் விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்வது என்பதும் குறித்தும், விலங்குகளின் ஊடாக பரவும் நோய் தொற்றுக்குரிய மருந்துகளை எப்படி கண்டறிந்து தக்க தருணங்களில் கையாள்வது குறித்தும் உலகம் முழுவதும் உள்ள வைத்திய நிபுணர்களால் விவாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்தியாவில்  தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான கால்நடை வைத்தியர்களும், வைத்திய நிபுணர்களும், விவசாயம் மற்றும் உணவுத்துறையில் ஈடுபட்டிருக்கும் வல்லுநர்களும் பங்குபற்றினர்.

இந்த தினத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான தொற்றுகளுக்கும், நோய்குறிகளுக்கும் விலங்குகள் தான் காரணமாக இருக்கின்றன. 

விலங்குகள் என்றவுடன் காட்டில் வாழும் விலங்குகள் அல்ல. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை, மாடு, பன்றி, கோழி, ஆடு, புறா, கிளி, என எண்ணற்றவை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். மனிதர்களுக்கு ஏற்படும் ஜப்பானிய மூளையழற்சி, எபோலா வைரஸ், ஜிகா வைரஸ் போன்ற புதிய வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு மிருகங்களே காரணமாக இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மனிதர்களை தாக்கும் பத்து நோய் தொற்றுகளில் ஆறு விலங்குகளால் ஏற்படுகிறது. அதனால் மனிதர்களின் ஆரோக்கியம் என்பது எம்மை சுற்றியிருக்கும் விலங்குகள், தாவரங்கள், சுற்றுபுற சூழல் ஆகியவற்றை பொருத்தே அமைகிறது. 

அதே சமயத்தில் விலங்குகள், தாவரங்கள், சுற்றுப்புற சூழல் மற்றும் மனிதர்கள் ஆகியோர் இடையே இருக்கும் உறவையும் பிரிக்க முடியாது. இந்நிலையில் மனிதர்களின் ஆரோக்கியம் இந்த சங்கிலி தொடருடன் இணைந்திருப்பதால் எம்மை சுற்றியுள்ள விலங்குகளின் ஆரோக்கியத்தையும், சுற்றுப்புறத்தை மாசடையாமல் சுத்தமாக வைத்திருப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அத்துடன் மனிதர்களைத் தாக்கும் இத்தகைய தொற்றுகளுக்கான மருந்துகளை தயாரிக்கும் போது உணவுத்துறை, விவசாயத்துறை , விலங்கியல் துறை மற்றும் மருந்தியல் துறை நிபுணர்கள் ஆகியோரின் கூட்டு ஒத்துழைப்பு அவசியமாகிறது. 

இவர்களால் தான் விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்த் தொற்றை தடுப்பதற்கான மருந்துகளையும், குணப்படுத்துவதற்கான மருந்துகளையும் கண்டறிய முடியும்.

மனிதர்களுக்கு ஏற்படும் 1415 நுண்ணுயிர் நோய்களில் 66 சதவீத பங்கு விலங்குகளின் மூலமாகத்தான் மனிதர்களுக்கு பரவுகிறது. அதனால் அதனை கட்டுப்படுத்துவற்கான விழிப்புணர்வை இன்று முதல் பெறத் தொடங்குவோம்.

டொக்டர் பாக்யராஜ்

தொகுப்பு அனுஷா.