(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

உள்நாட்டு ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுப்பதனை போன்று தற்போது சர்வதேச ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். ஆகவே 'நியூயோர்க் டைம்ஸ்' விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற  உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நெத் வானொலிக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெருமவின் பொலிஸ் முறைப்பாட்டுக்கு அமைவாகவே பொலிஸ் இந்த விசாரணையை முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பாக சரியாக நான் அறியவில்லை. 

நாம் ஒருபோதும் நெத் வானொலிக்கோ அல்லது ஊடகவியலாளர்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்க மாட்டோம். என்றாலும் தற்போது நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்தின் மீதும் அச்சுறுத்தல் விடுப்பதற்கு என்ன செய்வது? உள்நாட்டு ஊடகங்களுக்கு மாத்திரமின்றி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

நியூயோர்க் டைம்ஸ் செய்திக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றார்.