இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதற்காக ஓடிவந்த பின்னர் இறுதிநிமிடத்தில் பந்து வீசுவதை நிறுத்திக்கொள்வது குறித்து இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் டேவிட் வில்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலாவது ரி20 போட்டியில் புவனேஸ்வர் குமாரும், குல்தீவ் யாதவும் இவ்வாறு செயற்பட்டிருந்தனர். பந்து வீசுவதற்காக ஓடி வந்த பின்னர் இறுதி நிமிடத்தில் அவர்கள் பந்து வீசுவதை நிறுத்திக்கொண்டனர்.

பத்தாவது ஓவரில் குல்தீப் யாதவ் இரண்டு முறை பந்து வீசுவதற்காக ஓடிய பின்னர் பந்து வீசுவதை நிறுத்தினார்.

இரண்டாவது தடவை அவர் அவ்வாறு செய்தவேளை பட்லரும் ஹேல்சும் நடுவரிடம் முறையிட்டிருந்தனர்.

இங்கிலாந்து இனிங்சின் இறுதி பந்தில் புவனேஸ்வர் குமாரும் அவ்வாறு செய்தார்.

இதன் காரணமாக புவனேஸ்வர் குமாரிற்கும் வில்லிக்கும் இடையில் சிறிய முறுகல் நிலை ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது

இதனை விமர்சித்துள்ள வில்லி இது அனாவசியமற்ற நடவடிக்கை கிரிக்கெட்டின் அடிப்படைகளிற்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பது எனக்கு தெரியாது,ஆனால் இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.