(இரோஷா வேலு) 

பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பதவி உயர்வை இதுவரையில் அமுல்படுத்தவில்லை என கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்த்தன  இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை கையளித்தார். 

இதன்போது கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பாக சட்டத்தரணி பாலித சிறிவர்த்தன மற்றும் சட்டத்தரணி அசோக வீரசூரியவும் வருகை தந்திருந்தார். 

இதன்போது, இவ்வாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பில் சமூகமளித்திருந்த சட்டத்தரணி பி.துஷார குணவர்த்தன, முறைப்பாடை கையளித்துவிட்டு வந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

பொலிஸ் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பதவி உயர்வை திணைக்களத்தின் அதிபர் என்ற வகையில் இதுவரையில் அமுல்படுத்தாது காலம் தாழ்த்தியமைக்கு எதிராக இன்று நாம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை கையளித்துள்ளோம். இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆம் அத்தியாயத்தின் கீழே நாம் இம்முறைப்பாடை கையளித்துள்ளோம். 

இம்முறைப்பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இத்திணைக்களத்தில் அனுபவித்த அனைத்து இன்னல்கள் குறித்தும், அதற்கெதிராக எடுக்கப்படாத நடவடிக்கைகள் குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். 

அண்மையில் ஹோட்டலென்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டம் என்பது அனைவருக்கும் சமமனாது. எனவே எத்தரப்பினராலும் நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்தார். 

எனவே அக்கூற்றின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே இன்று நாம் இவ்வாறு முறைப்பாடொன்றை கையளித்துள்ளோம். விரைவில் இதற்கான விசாரணைகள் அவரால் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.