(நெவில் அன்தனி)

ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கும் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடிவரும் பெல்ஜியத்துக்குமிடையிலான இரண்டாவது காலிறுதிப் போட்டி கஸான் எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பொதுவாக உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் எந்த அணி அதிக கோல்களைப் போடும் என்று கேட்டால், மறுப்பேச்சுக்கு இடமின்றி பிரேஸில் என்ற பதில்தான் வரும். ஆனால் ரஷ்யாவில் கோல் போடுவதில் பிரேஸில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டதை அதன் கோல் (7) எண்ணிக்கை எடுத்துக்காட்டுகின்றது.

இம்முறை அதிக கோல்கள் போட்ட அணிகள் வரிசையில் ஐந்தாம் இடத்திலிருக்கும் தென் அமெரிக்கா நாடான பிரேஸில் 12 கோல்களுடன் முதலிடத்தில் உள்ள பெல்ஜியத்தையே இன்று எதிர்த்தாடவுள்ளது. 

பெல்ஜியத்தின் ஒரே ஒரு பிரச்சினை என்னவெனில் பின்வரிசையில் அவ்வணி வீரர்களது சறுக்கல்களாகும்.

எனினும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் போட்டவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள அதன் முன்கள வீரர் ரொமேலு லூக்காக்கு (4 கோல்கள்), அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட் ஆகிய இருவரும் எத்தகைய பலம்வாய்ந்த பின்களத்தையும் ஊடுறுத்துச் செல்லும் ஆற்றல் மிக்கவர்கள். 

அதேவேளை, நேமார், பிலிப்பே கூட்டின்ஹோ, வில்லியன், இன்றைய போட்டியில் இணைத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ரொபர்ட்டோ பேர்மினோ ஆகியோரைக் கட்டுப்படுத்துவதில் பெல்ஜியம் பின்கள வீரர்கள் சரியான வியூகங்களுடன் விளையாடவேண்டிவரும்.

ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலை வெற்றிகொண்டால் ரஷ்யாவில் ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியை பெல்ஜியம் பதிவு செய்வதுடன் அரை இறுதியிலும் விளையாட தகுதிபெறும்.

இதற்கு முன்னர் இந்த இரண்டு அணிகளும் ஒரே ஒரு தடவைதான் உலகக் கிண்ணப் போட்டியில் சந்தித்துள்ளன. 2002 இல் இரண்டாம் சுற்றில் ரிவால்டோ, ரொனால்டோ ஆகியோரின் கோல்களின் உதவியுடன் பிரேஸில் வெற்றிபெற்றிருந்தது. 

இவர்கள் இருவரைப் போன்று இம்முறை பிரேஸிலுக்கு நேமார், பிலிப்பே கூட்டின்ஹோ ஆகிய இருவரும் கைகொடுப்பர் என நம்பப்படுகின்றது. ஆனால் பிரேஸிலின் ஒவ்வொரு நகர்வுக்கும் ஏற்ற தடுத்தாடலுடன் எதிர்த்தாடலுக்கான வியூகங்களை பெல்ஜியம் அமைத்து விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்தத்தில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி இறுதிப் போட்டிக்கு ஒப்பானதாக அமைந்து கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

பிரேஸில் அணியில் நிரந்தர தலைவர் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்களே அணியை வழிநடத்திவந்துள்ளனர். இன்றைய போட்டிக்கு யார் தலைவராக விளையாடுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அணிகள் விபரம் 

பிரேஸில்: அலிசன், பாஞ்ஞர், தியாகோ சில்வா, மிரண்டா, பிலிப்பே லூயிஸ் அல்லது மார்செலோ, பெர்னாண்டின்ஹோ, பௌலின்ஹோ, வில்லியன், பிலிப்பே கூட்டின்ஹோ, நேமார், கேப்றியல் ஜீசஸ் அல்லது ரொபர்ட்டோ பேர்மினோ. 

பெல்ஜியம்: திபோட் கோர்ட்டொய்ஸ், ஜேன் வேர்ட்டொஞ்சென், வின்சென்ட் கொம்ப்பனி, டொவி ஆல்டர்வெய்ரெல்ட், எக்செல் விட்செல், கெவின் டி ப்றயன், நாசர் செட்லி, தோமஸ் மியூனியர், மெரௌன் பெல்லானி, ஈடன் ஹசார்ட் (அணித் தலைவர்), ரொமேலு லூக்காக்கு.