பில்லி சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் தொழிலுக்காக நாடு கடத்திய தாதிக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

லண்டனைச் சேர்ந்த ஜோசப்பின் இயாமு என்ற 53 வயதான  தாதி பில்லி சூனியம் செய்து நைஜீரியாவைச் சேர்ந்த பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு கடத்தியதாக கைது செய்யப்பட்டார். 

பிரிட்டன் குடியுரிமை பெற்ற இயாமு தேசிய சுகாதார மையத்தில் தாதியாக பணி புரிந்து வந்தவருக்கு பில்லி சூனியம் போன்ற மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு இருப்பதும் தெரியவந்தது.

நைஜீரியாவைச் சேர்ந்த 5 பெண்களை தன் வலையில் விழ வைத்த இயாமு, மந்திரவாதி ஒருவர் மூலம் நடத்தப்படும் மாந்திரக சடங்கில் பங்கேற்க செய்துள்ளார். 

குறித்த பூஜையை செய்து கோழியின் இதயத்தை உட்கொள்ள வைத்து, புழுக்களுடன் கூடிய இரத்தத்தை குடிக்கச் செய்து, பிளேடால் தங்கள் உடல்களில் கீறுவது என வக்கிரமான சடங்குகளை கட்டாயப்படுத்தி செய்ய வைத்துள்ளார். 

அதன்பின்னர், அவர்களை பாலியல் தொழிலுக்காக ஜேர்மன் நாட்டுக்கு கடத்தியது விசாரணையிலிருந்து தெரியவந்தது. 

மேலும் ஜெர்மனி சென்று தொழில் செய்யும்போது எங்கும் தப்பி ஓடிவிடக்கூடாது, பொலிஸாரிடம் சொல்லவும் கூடாது என்றும் மிரட்டி வாக்குறுதி பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இயாமு மீது பர்மிங்காம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதையடுத்து இயாமுவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.