தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார். 

 தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை வீரர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்தில் 12 பாடசாலை மாணவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மாயமாகினர். சியாங் ராய் பகுதியிலுள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட தேடுதலில் அனைவரும் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

 குறித்த மாணவர்கள் மாயமாகி 9 நாட்கள் கழித்து தான் அவர்களை பற்றிய தகவல் கிடைத்தது. 

குறித்த மாணவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போதிலும் அவர்களை அங்கிருந்து மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படையினர், முன்னாள் கடற்படை வீரர்கள், சர்வதேச நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை வீரர் குகையில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.