(நா.தனுஜா)

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தகுதியற்றவர்களை கல்வித்துறைசார் பதவிகளில் நியமிக்கும் செயற்பாடானது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டுக்குழு செயலாளர் லால் குமார தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்கொண்டு தகுதியற்றவர்கள் கல்வித்துறைசார் பதவிகளில் நியமிக்கின்றார்கள். இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ஆகவே அதனை தடுக்கவே நாங்கள் நேற்றைய தினம் போராட்டமொன்றை மேற்கொண்டோம்.

அப் போராட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாகவே ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தம்மிக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது  திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலாகும். இதனை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமே வழிநடத்தியுள்ளார்.  

எனவே இத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுக்கூற வேண்டும். அத்தோடு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்விடயம் தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுடன் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.