(இரோஷா வேலு)

தனியாருக்கு சொந்தமான கட்டடங்களில் இனிவரும் காலங்களில் அரச நிறுவனங்கள் இயங்கக் கூடாது. அதேபோல் ஆளுநர் அரச விழாக்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நட த்துவதையும் தவிர்த்து செலவீனங்களை குறைத்து திறைச்சேரிக்கு பணத்தை சேமிக்க வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் கே.சீ. லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதிகளவான அரச நிறுவனங்கள் தனியார் துறையினருக்கு சொந்தமான கட்டடங்களில் இயங்குவதனால் அரசாங்கத்துக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது. எனவே செலவீனங்களை குறைத்து திறைசேரியில் பணத்தை சேமிக்க இனிவரும் காலங்களல் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

அதேபோல், அரச கட்டடங்கள் இருக்கையிலேயே ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அரச விழாக்களை நடத்துவதினால் ஏற்படும் செலவீனத்தையும் குறைத்து திறைசேரிக்கு இலாபத்தை ஈட்டிக்கொடுக்க வேண்டும். 

அதற்கு முன்னுதாரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களில் மேல்மாகாண ஆளுநர் பணிமனை, கோட்டை நகர சபைக்கு சொந்தமான இராஜகிரியவில் அமைந்து அரச கட்டடத்தின் ஐந்தாம் மாடிக்கு மாற்றப்படுகின்றது. இதன்மூலம் தற்போது செலவிடப்படும் 21 இலட்சம் ரூபா வாடகைப் பணம் எழு இலட்சமாக குறைக்கப்பட்டு 14 இலட்சம் ரூபா சேமிக்கப்படும்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் அனைத்து அரச நிறுவனங்களும் அரச கட்டடங்களுக்கு மாற்றமடைதல் வேண்டும். இதற்கு அனைத்து அரச தரப்பினரும் முன்வர வேண்டும் என்றார்.