(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

அம்பாந்தோட்டை துற‍ைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது எமக்கு சீனாவிடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை. அவ்வாறு அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை நாம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னைய ஆட்சியின்போது 1320 மில்லியன் டொலர் கடன் பெற்றே நிர்மாணிக்கப்பட்டது. கடன் பெற்று துறைமுகத்தை நிர்மாணித்தாலும் கப்பலை கொண்டு வருவதற்கு முன்னைய ஆட்சியாளர்களால் முடியவில்லை. கடன் சுமையை மாத்திரமின்றி கப்பல் வராத துறைமுகத்தையும் எம்மால் சுமக்க வேண்டி ஏற்பட்டது. 

இந் நிலையில் அம்பாந்தோட்டை துற‍ைமுகத்தின் முகாமைத்துவத்தையும் கடனையும் கொழும்பு துறைமுகமே செலுத்தி வந்தது.  2011 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் 47 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 

ஆகவே வெள்ளை யானையாகவிருந்த துறைமுகத்தை வளர்ச்சி மிகு துறைமுகமாக மாற்ற நாம் எண்ணினோம். இதன் காரணமாக பல பேச்சுவார்த்தைகளை கொண்டு தனியார்- அரச கூட்டுப் பங்கான்மையின் கீழ் அம்பாந்தோட்டை துற‍ைமுகத்தை முன்னேற்ற திட்டமிட்டோம். 

அந்த வகையில் இலாபமீட்டும் நோக்கில் சீன நிறுவனத்திற்கு அம்பாந்தோட்டை நிறுவனத்தை குத்தகைக்கு வழங்கினோமே தவிர அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்கவில்லை. 

இந்த துறைமுகம் எதிர்காலத்தில் வளர்ச்சிமிகு துறைமுகமாக மாற்றம் அடையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமையினால் எந்தவொரு பாதிப்பு ஏற்படாது. அத்துடன் சீனா இராணுவத்தினால் அம்பாந்தோட்டைக்கு வருகை தர முடியாது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை நாம் சீனா உயர்மட்டத்திற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். 

அம்பாந்தோட்டை துற‍ைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது எமக்கு சீனாவிடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை. அப்படி அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை நாம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது. மத்தள விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவே நாம் முற்பட்டோம் என்றாலும் அதனை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் ஆர்வம் காட்டமையின் காரணமாக‍ இந்தியாவுக்கு மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்கவுள்ளோம். 

மேலும் சுயாதீன இராஜ்ஜியமாக சீனாவுடனும் இந்தியாவுடனும் சமமாக கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம். அம்பாந்தோட்டை துற‍ைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதனை நான் உறுதியாக கூறுகின்றேன் என்றார்.