(இரோஷா வேலு) 

அரசியலமைப்பு விதிமுறைகளை மீறிய சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை பாராளுமன்றிலிருந்து விரட்டியடிக்க வேண்டுமென தெரிவித்துள்ள மேல்மாகாண ஆளுநர் கலாநிதி  ஹேமகுமார நாணயக்கார புலம்பெயர் தமிழர்களின் பணத்தினை பெற்றுக்கொண்டு இலங்கையில் மீண்டும் பதற்ற நிலைமையை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமெனவும் குறிப்பிட்டார்.  

சர்ச்சைக்குரிய விஜயகலா மகேஸ்வரனின் உரைத்தொடர்பில் இன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மேல் மாகாண சபை ஆளுநரர் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமாயின் மீண்டும் புலிகள் வேண்டும் என தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, அரசியலமைப்பு விதிமுறைகளை மீறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை பாராளுமன்றத்தை விட்டும் விரட்டியடிக்க வேண்டும். 

இதேபோல், வடக்கில் சில மடையர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறன  கருத்துக்களை வெளியிடுகின்றனர். சர்வதேச ரீதியில் இன்னும் பதுங்கியிருக்கும் புலிகள் சார்பான புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவிப்போரே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றனர். 

அதேபோல், இவற்றுடன் தொடர்புடைய சிங்கள பாராளுமன்ற உறுப்பினரொருவரும் உள்ளார். அவர் தொடர்பில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். விரைவில் அவரையும் பாராளுமன்றத்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறனவர்களினால் வெளியிடப்படும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் இனவாதத்தை தோற்றுவிக்கின்றன. 

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு புலிகளின் மீள்வருகை எவ்வகையில் நியமாகும். இதற்கு இவரை கேர்னல் ரத்னபிரிய போன்றவர்களிடம் புனர்வாழ்வு பெற்றுக்குகொள்ள அனுப்ப வேண்டும். புலிகளினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் இவர். தனது கணவனை இழந்த நேரத்தில் புலிகளை சபித்தவர். ஆனால் தற்போது இவர் கூறியுள்ள கருத்தானது இவர் சுயமாக உரையாற்றியதாக தெரியவில்லை. 

இப்படியான கருத்துக்களினால் மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் அரசியல் தலைவர்களை மக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.