யாழ்ப்பாணம் மல்லாகம் கட்டுவன் வீதியிலமைந்துள்ள பல்பொருள் களஞ்சியசாலை மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் 3 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு இனந்தெரியாத நால்வர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கடையில் பொருத்தப்பட்டிருந்து சி.சி.ரி.வி. கமெராவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த களஞ்சியசாலையின் பின்புறக்கதவு உடைக்கப்பட்டிருந்த போதிலும் எவ்வித பொருட்களும் களஞ்சியசாலையில் இருந்து களவாடப்படவில்லை என்பதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாதோர், சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.