சுவீடனுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் இன்று இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான முன்னோடி கால் இறுதிப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் இறுக்கமான வெற்றியை ஈட்டிய சுவீடன் ஏழாவது நாடாக உலகக் கிண்ண கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியின் 66ஆவது நிமிடத்தில் சுவீடன் வீரர் எமில் போர்ஸ்பேர்க் ஓங்கி உதைத்த பந்து சுவிட்சர்லாந்து பின்கள வீரர் ஒருவர் மீது பட்டு திசைதிரும்பி கோலினுள் சென்றது.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியின் 9ஆவது நிமிடத்தில் சுவீடனுக்கு கிடைத்த வாய்ப்பை மார்க்கஸ் பேர்க் வீணாக்கினார். இதே வீரரது 28ஆம் நிமிட முயற்சியை சுவிட்சர்லாந்து கோல்காப்பாளர் யான் சொமர் கையால் தட்டி திசை திருப்பினார்.

பத்து நிமிடங்கள் கழித்து சுவிட்சர்லாந்து வீரர் ப்ளேரின் டிஸெமய்லி உதைத்த பந்து சுவீடனின் குறுக்கு கம்பத்துக்கு மேலாக சென்றது.

41ஆவது நிமிடத்தில் போட்டியின் முதலிரண்டு  கோர்ணர் கிக்குகளும் சுவீடனுக்கு பலனளிக்காமல் போயின.

இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இரண்டு அணிகளும் கோல் எதனையும் போட்டிருக்கவில்லை.

இடைவேளையின் பின்னர் போட்டி சுவாரஸ்யம் குன்றி காணப்பட்டது.

போட்டியின் 66ஆவது நிமிடத்தில் ஒலா டொய்வோனென் பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட சுவீடன் வீரர் போர்ஸ்பேர்க், பெனல்டி எல்லையில் இருந்து படுவேகமாக கோலை நோக்கி உதைத்த பந்து சுவிட்சர்லாந்தின் பின்களவீரர் மீது பட்டு திசைதிரும்பி கோலினுள் சென்றது. அந்த சந்தர்ப்பத்தில் கோல்காப்பாளர் யான் சொமர் செய்வதறியாது திகைத்தவராக நின்றார்.

அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த சுவிட்சர்லாந்தும் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க சுவீடனும் முயற்சித்தபோதிலும் அந்த முயற்சிகள் எதுவும் பலிதமளிக்கவில்லை.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் சுவிட்சர்லாந்தின் கடைசி முயற்சியை சுவீடன் கோல்காப்பாளர் தடுத்தார். 

அதனைத் தொடர்ந்து சுவீடனுக்கு கோல்போடுவதற்கான நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. உபாதையீடு நேரத்தின் 3ஆவது நிமிடத்தில் நீண்ட பந்துபரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்ட சுவீடன் வீரர் மார்ட்டின் ஒல்சொன் பந்தை நகர்த்தியவாறு சுவீடன் கோலை நோக்கி வேகமாக ஓடினார். அந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பின்னால் துரத்திய மைக்கல் லெங் கையால் தள்ளி வீழ்த்தினார். உடனடியாகவே விசிலை ஊதிய மத்தியஸ்தர் பெனல்டி இலக்கை நோக்கி கையை நீட்டியதுடன் மைக்கல் லெங்குக்கு சிவப்பு அட்டையையும் காட்டினார்.

எனினும் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பை நாடிய மத்தியஸ்தர், தனது பெனல்டி தீர்ப்பை மாற்றி பெனல்டி விளிம்பில் ப்றீ கிக் ஒன்றை வழங்கினார். எனினும் கடைசி பின்கள வீரராக எதிரணி வீரரரை வீழ்த்திய மைக்கல் லெங்கின் சிவப்பு அட்டையில் மாற்றம் இல்லை என மத்தியஸ்தர் அறிவித்தார்.

தொடர்ந்து ஒலா டொல்வோனெனின் ப்றீ கிக்குடன் போட்டி முடிவுக்கு வந்தது.

பலம்வாய்ந்த பிரேசிலுடனான லீக் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட 

சுவிட்சர்லாந்தின் ஜம்பம் சுவீடனிடம் பலிக்காமல் போனது. உலகக் கிண்ண கால் இறுதியில் 24 வருடங்களின் பின்னர் சுவீடன் விளையாட தகுதிபெற்றுள்ளது.