பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று ஒரு நகர மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு மேயர்  மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசார் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து பட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி கொல்லப்பட்ட அதிர்ச்சி அந்நாட்டு மக்களிடம் இருந்து இன்னும் விலகாத நிலையில் நுயேவா எகிஜா மாகாண தலைநகரில் இன்று காரில் சென்ற நகர மேயர் பெர்டினாண்ட் போட்டே(57) என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இன்று சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் 18 தோட்டாக்கள் சிதறிகிடந்ததாக தெரிவித்த பொலிஸார், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.