பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிவடைந்தமையினால் நாளைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து அதன் பிரதிநிதியும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளருமான ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகையில், 

கல்வியை அரசியல் மையப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாங்கள் இந்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம். அந்த வகையில் நாளை கல்வி அமைச்சின் முன்னால் பாரிய இப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

இந் நிலையில் கல்வியை அரசியல் மையப்படுத்தும் செயற்பாடானது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் நாளையும் அதன் பின்னரும்  பல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுப்போம் என்றார்.

அதேநேரம் கடமை உணர்வுமிக்க அதிகாரிகள் நாளைய தினம் சேவைக்கு சமூகமளிப்பார்கள் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.