(ஆர்.யசி)

மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதைத் தடுப்பதற்கு எவ் வகையிலாவது நடவடிக்கை எடுப்போம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்விவகார மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பினை ஆறாவது சரத்தனை மீறும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை விவாதிப்பதற்கு சந்தர்ப்பம் கோரியபோது அதற்கு சபாநாயகர் இடமளிக்கவில்லை. இதன் காரணமாகவே சபை நடுவில் இறங்கி கோஷம் எழுப்பினோம்.

நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்பவில்லை என மக்கள் எம்மிடம் கேட்பார்கள். எனவே எவ்வாறான முயற்சிகளை எடுத்தாவது இந்த சூழ்ச்சிகளை நாம் தடுக்க வேண்டும் என்றார்.