(நா.தினுஷா) 

'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்தானது உண்மைக்கு புறம்பானது என கூறும் மஹிந்த ராஜபக்ஷ அதனை ஆதரபூர்வமாக நிரூபிக்க முன்வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சீன துறைமுக  நிறுவனத்திடம்  இருந்து  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 7.6 பில்லியன் ரூபாவை கடந்த 2015 ஆண்டு  ஜனாதிபதி  தேர்தல் பணிகளுக்காக பெற்றுள்ளார் என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியானது பல  உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஆரம்ப கட்டமாகவே காணப்படுகின்றது.

இவ்வாறு சர்வதேச தரம்பெற்ற பத்திரிகை பொய்யான விடயங்களை பரப்பி மக்கள் மத்தியில் வதந்தியை ஏற்படுத்துவதற்கான அவசிம் ஏதும் கிடையாது. ஆகவே பத்திரகை வெளியிட்டுள்ள செய்தி பொய்யாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அதனை ஆதார பூர்வமாக நிரூபிக்க முன்வர வேண்டும். 

ஆனால் அவரை தவிர்த்து அவரது கட்சியின் உறுப்பினர்களே தற்போது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ் விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ பின்வாங்குவது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.