சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை   கண்டித்தும் இன்று காலை 10 மணியளவில் -மன்னார் முருங்கனில் அமைதி பேரணி இடம் பெற்றது.

மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் முருங்கன் வைத்தியசாலைக்கு முன் குறித்த பேரணி ஆரம்பமானது.

குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை  மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி,பிரதேச சபை உறுப்பினர்கள்  மற்றும்   பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து முருங்கன் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கினர்.

குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று முருங்கன் பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது.

அதனைத்தொடர்ந்து அங்கு கண்டன உரைகள் இடம் பெற்றதோடு ஏற்பாட்டுக்குழுவினரினால் கோரிக்கை அடங்கிய மகஜர் உரிய தரப்பினருக்கு கையளிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.