(இரோஷா வேலு) 

மரண அச்சுறுத்தல் விடுத்து வர்த்தகர் ஒருவரிடமிருந்து கப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் அதனை கைமாற்ற உதவிய பொண்ணொருவர் கப்ப பணத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அம்பலங் கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது, 

வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய பிரதான சந்தேகநபர் கப்பப் பணத்தை குறித்த பெண்ணிடம் வழங்க கோரியுள்ள நிலையில், குறித்த பெண் அப்பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்த போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

அம்பலங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலபிட்டிய ச.தொ.ச நிறுவனத்தில் பணியுரியும் பெண்ணொருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் பெந்தொட்ட பிரதேசத்தில் வசித்து வரும் நிலையில், சட்டவிரோத செயலுக்காக சிறையிலிருக்கும் தனது சகோதரியின் நண்பரொருவரின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு கப்ப பணத்தை கைமாற்ற முனைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

வர்த்தகரொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து ஒரு இலட்சம் ரூபா கப்பம் பணம் கோரப்பட்ட நிலையில் வர்த்தகரினால் அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடளிக்கப் பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டினை தொடர்ந்து குறித்த வர்த்தகர் 50,000 ரூபா கப்ப பணத்தை அப்பெண்ணுக்கு வழங்க ச.தொ.ச நிறுவனத்துக்கு சென்றிருந்த வேளையில் அப்பெண் கப்பப்பணத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை பொலிஸார் நேற்று பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான பிரதான சூத்திரதாரியை கைதுசெய்யவும் அம்பலங்கொட குற்றத்தடுப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ். பிரேமலாள் தலைமையிலான குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.