ஜப்பானுடனான போட்டியில் 2 கோல்களால் பின்னிலையிலிருந்த பெல்ஜியம், உபாதையீடு நேரத்தில் போடப்பட்ட கோல் மூலம் 3 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று உலகக் கிண்ண கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ரொஸ்டோவ் எரினா விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற இந்த முன்னோடி கால் இறுதிப் போட்டியின் 69ஆவது நிமிடம் வரை ஜப்பான் 2 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

உலகக் கிண்ண நொக் அவுட் போட்டி ஒன்றில் 2 கோல்கள் பின்னிலையிலிருந்த அணி ஒன்று மீண்டுவந்து வெற்றிபெற்றது கடந்த 48 வருடங்களில் இதுவே முதல் தடவையாகும். மெக்சிகோவில் 1970இல் நடைபெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் மேற்கு ஜேர்மனி இதேபோன்று வெற்றிபெற்றிருந்தது.

பெல்ஜியத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பை தோற்றுவிப்பதாக அமைந்தது. இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடி அவ்வப்போது இரசிகர்களைப் பரபரப்பில் ஆழ்த்திய வண்ணம் இருந்தன. எனினும் போட்டியின் முதலாவது பகுதியில் எந்த அணியினாலும் கோல் போட முடியாமல் போனது.

ஆனால் இடைவேளைக்குப் பின்னர் 4 நிமிட இடைவெளியில் ஜப்பான் 2 கோல்களைப் போட்டு பெல்ஜியத்தை ஆட்டங்காண வைத்தது.

போட்டியின் 48ஆவது நிமிடத்தில் ஜென்கி ஹராகுச்சி கோல் போட்டு ஜப்பானை முன்னிலையில் இட்டார். அடுத்த நிமிடம் பெல்ஜியம் அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட் உதைத்த பந்து ஜப்பான் கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது.

தொடர்ந்து போட்டியின் 52ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லைக்கு வெளியே இருந்து டக்காஷி இனுய் பலமாக உதைத்த பந்து பெல்ஜியத்தின் கோலினுள் புக ஜப்பானுக்கு நான்கு நிமிட இடைவெளியில் இரண்டாவது கோல் கிடைத்தது.

இந்தக் கோலை அடுத்து நடப்பு உலகக் கிண்ணப் போட்டியில் பெல்ஜியம் வீரர்கள் முதல் தடவையாக அதிர்ச்சிக்குள்ளானதுடன் நெருக்கடியையும் எதிர்நோக்கினர். ஆனால் சற்று நேரத்தில் வழமைக்கு திரும்பிய பெல்ஜியம் அணியினர் போட்டியில் எதிர்நீச்சல் போட ஆரம்பித்தனர்.

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் அதற்கான பலனையும் பெற்றனர். ஜேன் வோட்டெஞ்சென் தலையால் முட்டிய பந்து ஜப்பான் கொல்காப்பாளர் எய்ஜி கவாஷிமாவைக் கடந்து கோலினுள் செல்ல பெல்ஜியம் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அடுத்த 5ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட் பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய மாற்றுவீரர் மெறூன் பெலானி தலையால் முட்டி கோல் நிலையை சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை தோன்றியது.

ஜப்பானனி்ன் மாற்றுவீரராக 88ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த கெய்சூக்கே ஹொண்டா, 90ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் கோல் எல்லையை ஆக்கிரமித்து கோல் போட முற்பட்டார். ஆனால் ஆறு யார் கட்டத்தின் விளிம்பிலிருந்து அவர் உதைத்த பந்தை பெல்ஜியம் கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்ஸ் தடுத்து நிறுத்தி பெல்ஜியத்தைக் காப்பாற்றினார்.

சிறிது நேரத்தில் இன்னும் ஒரு வாய்ப்பை மயா யொஷிடா தவறவிட்டார்.

உபாதையீடு நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் ஜப்பானின் மின்னல் வேக கோர்ணர் கிக் பந்தை தாவிப் பிடித்த திபோட் கோர்ட்டொய்ஸ், உடனடியாக பந்தை ஜப்பான் எல்லையை நோக்கி உதை்ததார்.

பந்தைப் பெற்றுக்கொண்ட பெல்ஜியத்தின் மற்றொரு மாற்று வீரரான நேசர் செட்லி மிக இலாவகமாக பந்தை நகர்த்திச் சென்று 12 யார் தூரத்திலிருந்து அபார கோல்போட்டு ஜப்பானை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் ஜப்பான் வீரர்கள் அனைவரும் நேராக நின்று இரசிகர்களை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்கி விடைபெற்றபோது முழு அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவர்களைப் பாராட்டியது. இந்தப் பாராட்டுதல்களுடன் உலகக் கிண்ண முடிவில் ஜப்பானுக்கு நேர்த்தியான விளையாட்டுக்குரிய விருது வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.