ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் சம்பியனாகக்கூடிய அணிகளில் ஒன்றாக விளங்கும் பெல்ஜியத்தை ஆசிய வலயத்தின் நம்பிக்கைக்குரிய ஜப்பான் இன்று இரவு நடைபெறவுள்ள ஆறாவது முன்னோடி கால் இறுதி உலகக் கிண்ணப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

இப் போட்டி ரொஸ்டோவ் எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

லீக் சுற்றில் தாராளமாக கோல் போட்டுவந்துள்ள பெல்ஜியம், உலகக் கிண்ண வரலாற்றில் மூன்றாவது தடவையாக கால் இறுதிக்குள் நுழைவதைக் குறியாகக் கொண்டு இன்றைய போட்டியை எதிர்கொள்கின்றது. லீக் சுற்றில் இவ்வணியே அதிக கோல்களைப் போட்டுள்ளது.

ஜப்பானைப் பொறுத்த மட்டில் முன்னோடி கால் இறுதியில் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம்தான் கைகொடுத்தது எனலாம். எச் குழுவில் செனகலுடன் சகல விடயங்களிலும் சமமாக இருந்த ஜப்பான், நேர்த்தியான விளையாட்டுக்கான புள்ளிகளின் அடிப்படையில் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. 

பெருவிடம் 2010 முன்னோடி கால் இறுதயில் தோல்வி அடைந்த ஜப்பான் இம்முறை ஒரு படி மேல் செல்லும் எண்ணத்துடன் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ஐந்து தடவைகள் இதற்கு முன்னர் மோதியுள்ளன. அவற்றில் நான்கில் மெக்சிகோவும் ஒன்றில் ஜப்பானும் வெற்றிபெற்றுள்ளன.

(என்.வீ.ஏ.)

அணிகள் விபரம்

பெல்ஜியம்: திபோட கோர்ட்டொய்ஸ், ஜேன் வேர்ட்டொஞ்சென், வின்சென்ட் கொம்ப்பெனி, டொவி ஆல்டவெய்ரெல்ட், அக்செல் விட்செல், கெவின் டி ப்றயன், யனிக் கெராஸ்கோ, தொமஸ் மெனியர், ட்ரைஸ் மேர்ட்டென்ஸ், ஈடன் ஹஸார்ட் (அணித் தலைவர்), ரொமேலு லூக்காக்கு.

ஜப்பான்: எய்ஜி கவாஷிமா, ஹிரோக்கி சக்காய், மாயா யொஷிடா, ஜென் ஷோஜி, யுட்டோ நகாட்டோமோ, மக்கோட்டோ ஹசிபே (அணித் தலைவர்), காக்கு ஷிபாசாக்கி, ஜென்கி ஹராகுச்சி, ஷிஞ்சி ககாவா, டக்காஷி இனுய், யுயா ஒசாகா.