தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் கால்பந்தாட்ட அணியசை் சேர்ந்த 12 சிறுவர்களும், அணியின் உதவிப் பயிற்சியாளரும் தாம் லுவாங் என்ற குகைக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி தாம் லுவாங் என்ற குகையானது 10 கிலோ மீற்றர் நீளமுடையதாகும். இந்தக் குகைக்குள் கடந்த வாரம் 11வயது முதல் 16-வயதுடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்களும் அணியின் உதவிப் பணியிற்சியாளரும் இந்த குகைக்குள் சென்றுள்ளனர்.

இவர்கள் குகைக்குள் நுழைந்த நாள் முதல் மழை கடுமையாக பெய்ததால், 8 ஆவது நாளாகவும் குகையில் இருந்து வெளியேவர முடியாமல் போயுள்ளது.

இந் நிலையில் குறித்த கால்பந்தாட்ட அணியைக் காணாமல் பல்வேறு இடங்களில் அணியின் நிர்வாகம் தேடியபோது தாம் லுவாங் குகைப்பகுதிக்கு அருகே சிறுவர்களின் பைகளும் சைக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர்‍ தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், அனர்த்த மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. 

இது குறித்து  குறித்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் நோபார்ட் காத்தாங்வோங் கூறுகையில், 

கடந்த ஒரு வாரத்துக்குப் பின் மீட்புப்பணி மீண்டும் நடப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. மழை நின்றுவிட்டது. மீட்புப்பணியினரும் குகைக்குள் செல்லும் வழியைக் கண்டுபிடித்துவிட்டதால், எனக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந் நிலையில் இந்த மீட்பு பணிக்கு உதவ  இங்கிலாந்து, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கடற்படை வீரர்கள் என பலர் முன்வந்துள்ளனர்.

இது குறித்து தாய்லாந்து நாட்டின் அதிகாரிகள் கூறுகையில்,

தாம் லாங் குகை தாய்லாந்து நாட்டின் மிகநீண்ட குகை, மிகவும் கடினமானது. உள்ளே சென்றுவிட்டால், மீண்டும் வந்த பாதையை அடையாளம் கண்டுவருவது கடினமாகும். இந்தக் குகைக்கு அடிக்கடி இந்த சிறுவர்கள் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள். தேடுதல் வேட்டையில் அவர்கள் கிடைத்துவிடுவார்கள் என நம்புகிறோம் என்றார்.