(நா.தினுஷா)

அரசாங்கத்தின் கவனயீனமும் நிலையான கொள்கையீனமுமே தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு காரணம் என தேசப்பற்றுள்ள வல்லுனர்கள் இயக்கத்தின் உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் கவனயீனமும் நிலையான கொள்கையீனமுமே தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு காரணம். கடந்த அரசாங்கத்தில் நிர்மாண பணிகளுக்கென செலவிடப்பட்ட தொகையினைவிட இந்த அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவம் காரணமாக   பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

மேலும் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தேசிய கொள்கைகளையும் சமூக கொள்கைகளையும் தனது ஆட்சிக் கொள்கைகளாக கொண்டு தனது அரசாங்கத்தை கொண்டுசென்றன. இருப்பினும் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் கொள்கைகள் எதுவுமின்றி தனது ஆட்சியினை மேற்கொண்டுவருகின்றது. 

எனவே நாட்டை மீண்டும் அபிவிருத்தி என்ற ரீதியில் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கொள்கையற்ற தேசிய அரசாங்கத்தினை ஒழித்த முறையான நிலைபேறான அபிவிருத்தியினை தோற்றுவிக்க வேண்டும் என்றார்.