அமெரிக்காவிற்குள் நுழைய முயலும் குடியேற்றவாசிகளிடமிருந்து அவர்களது குழந்தைகளை பிரிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளன.

நியுயோர்க் வோசிங்டன், சான்பிரான்சிஸ்கோ,லொஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பதற்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் ஐஸ் எனப்படும் சட்டத்திற்கு எதிரான இயக்கமே இந்த ஆர்ப்பாட்ங்களை ஏற்பாடு செய்துள்ளது

2000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடமிருந்து பிரிக்கும் நடவடிக்கைக்கு எதிராகவே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளனர்

சுமார் 750 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் பல விவகாரங்கள் குறித்து கவலையடைந்துள்ளோம் ஆனால் குடும்பங்கள் ஒன்றாகயிருக்கவேண்டும் என்பதே அனைத்தையும் விட முக்கியமானது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பல நகரங்களில் கடுமையான வெப்பநிலை நிலவுகின்ற போதிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன,கலைஞர்கள் சமூகஆர்வலர்கள் உட்பட பல பிரபலங்களும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பிரிப்பது டிரம்ப் நிர்வாகத்தின் ஈவிரக்கமற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஒருதேசமாக எதனை நாங்கள் வலியுறுத்துகின்றோமோ டிரம்பின் நடவடிக்கைகள் அதற்கு எதிரானவையாக காணப்படுகின்றன  எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

அகதிகள் இங்கு வரவேற்கப்படுகின்றனர் என தெளிவாகவும் உரத்தும் உறுதியாகவும் தெரிவியுங்கள் என நியுயோர்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டுள்ளனர்.

இது எங்கள் நாடு இங்கு எங்களை பிழையான வழியில் இட்டுச்செல்லும் ஏதாவது நடந்தால் நாங்கள் அமைதியாகயிருக்க முடியாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.