யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த இனந்தெரியாதோர் வீட்டின் உரிமையாளரை கட்டி வைத்துவிட்டு, அவரின் கண் முன்னே அவரது மனைவியை கொடூரமாக தாக்கி சித்திரவதைக்குட்படுத்தியுதுடன் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கணவனும் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்த வேளை அதிகாலை ஒரு மணியளவில் இனந்தெரியாத இருவர் நுழைந்து கணவனை கடுமையாக தாக்கியதுடன் அவரை கதிரையுடன்  கட்டிவைத்து விட்டு, கணவன் கண் முன்னே மனைவியை கொடூரமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான 59 வயதுடைய பெண் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.