இலங்கை மனித உரிமைகள் குறித்த தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடா தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மக்கினன் இதனை தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி அனைவரையும் உள்ளீர்த்தல் போன்றவற்றை வலுப்படுத்துதல் அனைத்து இலங்கையர்களினதும் நலன்களிற்கும் உகந்த விடயம் என கனடா நம்புகின்றது என தூதுவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை இயங்கச்செய்தது போன்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எங்களிற்கு நம்பிக்கையை அளித்துள்ளன என தெரிவித்துள்ள தூதுவர் இலங்கை தனது மக்களிற்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என கனடா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச சகாக்களுடன் உறவுகளை பேணுவதற்கான நடவடிக்கைகளை  இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.