சேலம் - சென்னை இடையேயான எட்டு வழி பசுமை சாலையில் சென்னை, சேலம், பெங்களுர், மதுரை ஆகிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் 30 சதவீதம் தடுக்கப்படும் என்று பா.ஜ.க வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

‘டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரியை சந்தித்த போது, அவர் சேலம் சென்னை இடையேயான எட்டு வழி பசுமை சாலை குறித்து சில விளக்கங்கள் கொடுத்துள்ளார்.

அதில் மக்களுக்கு பலன் உள்ளது. பசுமை சாலை அமைப்பதற்கு பல வழிமுறைகள் உண்டு. அதன்படி தான் அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது. சாலை போடுவதற்கு ஐந்து மலைகளில் எந்த மலையையும் குடையவில்லை. சேலம் புறவழிச்சாலையைத் தவிர வேறு எந்த இடத்திலும் சுரங்கம் உருவாக்கவில்லை. இந்த திட்டத்தினால் சேலம், சென்னை, பெங்களூர், மதுரை ஆகிய நெடுஞ்சாலைகளில் 30 சதவீத விபத்து தடுக்கப்படும். ஆரம்பத்தில் எந்த திட்டமும் தவறாக தான் புரிந்து கொள்ளப்படும். பசுமை சாலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபடும். மாநில அரசு இத்திட்டத்தை குறித்து மக்களிடம் எச்சரிக்கையோடு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும், இதையும் மீறி அவர்களுக்கு மன வருத்தம் இருந்தால் அது என்ன என்று பரிசீலிக்கப்படும்.

விவசாயிகளிடம் கோரிக்கை மனு வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்கள் வரும். மக்கள் பா.ஜ.கவை விமர்சிக்கவில்லை. எதிர்கட்சிகள் தான் விமர்சிக்கின்றனர். இதை தாண்டி தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும். மாநில அரசு, பசுமை சாலை குறித்த சந்தேகங்களை விளக்க வேண்டும்.’ என்றார்.